‘பெண்கள், இளைஞர்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்’ - ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரை!


இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு முதன்முறையாக உரையாற்றிய திரௌபதி முர்மு, “சாதாரண ஏழைவீட்டில் பிறந்த நான் நாட்டின் ஜனாதிபதி ஆகமுடியும் என்பதுதான் நமது ஜனநாயகத்தின் சக்தி. என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கு திறவுகோலாக இருக்கும். பெண்கள் மற்றும் இளைஞர்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். பெண்கள் மேலும் மேலும் அதிகாரத்தை அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியாக பதவியேற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.

நாட்டு மக்களின் வளமான வாழ்க்கைக்கு பங்காற்றுவேன். பல ஆண்டுகளாக முன்னேற்றம் காணாத பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் என்னை அவர்களின் பிரதிபலிப்பாக பார்க்கலாம்.

சுதந்திர தின போராட்டத்தில் பழங்குடியின மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். நாட்டின் சுயமரியாதையை முதன்மையாக வைக்க சுதந்திர போராட்ட வீரர்கள் கற்றுத் தந்துள்ளனர். அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து பாரதத்தை முனைப்புடன் கட்டியெழுப்புவோம்” என தெரிவித்தார்

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

x