7,301 காலியிடங்களுக்கு 22 லட்சத்து 2942 பேர் போட்டி: குரூப் 4 தேர்வு தொடங்கியது!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழகத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைக்கும் குரூப் 4 தேர்வு இன்று காலையில் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 7689 தேர்வு மையங்களில் லட்சக்கணக்கானோர் இந்தத் தேர்வை எழுதிவருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சற்றுமுன் துவங்கியது. 7,301 காலியிடங்களுக்கு, 7689 தேர்வு மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. இதில், 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2942 பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 503 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 9.30 மணிக்குத் தேர்வுகள் தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது. தேர்வுக்குச் செல்வதற்கு வசதியாகவும், தேர்வு முடிந்து மீண்டும் செல்வதற்கு வசதியாகவும் அரசு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 150 பேர் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 7,689 வீடியோ பதிவாளர்களும் பணியில் உள்ளனர். நண்பகல் 12.30க்கு தேர்வு முடிவடையும்.

x