நிறுத்தப்பட்ட ரோப்கார்... பழுதான மின்இழுவை ரயில்: பழநியில் அவதிக்குள்ளான பக்தர்கள்!


நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

ஆடி மாத கார்த்திகை தினத்தை முன்னிட்டு பழநி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரோப்கார் பராமரிப்பு பணி மற்றும்‌ மின்இழுவை ரயில் பழுது காரணமாக பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தினத்தன்று முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்‌‌. இன்று ஆடி மாத கார்த்திகை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கார்த்திகை தினம்‌ மற்றும் வார விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இந்நிலையில், அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, விளா பூஜை, சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொது தரிசனம், சிறப்புக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும்‌ பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இச்சூழலில், பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் ரோப்கார் சேவை வருடாந்திர பராமரிப்புப்பணி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மின்இழுவை ரயிலுக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இந்நிலையில், மூன்றாவது மின்இழுவை‌ ரயிலும் பழுது ஏற்பட்டு‌ திடீரென நிறுத்தப்பட்டதால். இரண்டு மின் இழுவை ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. ஏற்கெனவே ரோப்கார் இல்லாத நிலையில் தற்போது மின் இழுவை ரயில் ஒன்றும் பழுதானதால் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து மலைக் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யும்‌ நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறானி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

x