ஜம்மு காஷ்மீரில் பதற்றம்: 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்; 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்கள் பலியாகினர், 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மோடர்காம் கிராமத்தில், இரண்டு பயங்கரவாதிகள் தங்கியிருக்கலாம் என நம்பப்பட்ட ஒரு வீட்டின் மீது சிஆர்பிஎஃப், ராணுவம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலின் போது ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்.

குல்காமின் ஃபிரிசல் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டரில், கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகளின் உடல்களை ட்ரோன் காட்சிகள் காட்டின. இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், மற்றொரு ராணுவ வீரர் காயமடைந்தார்.

இந்த இடத்தில் ஏற்பட்ட பலத்த தீ காரணமாக பயங்கரவாதிகளின் உடல்களை மீட்க முடியவில்லை. மேலும் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டர் நடந்த இடத்தில் பதுங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் சமீபத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கடந்த மாதம், தோடா மாவட்டத்தின் காந்தோ பகுதியில் பாதுகாப்புப் படையினர் மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர்.

x