ரயில்வே துறை கேரளத்திற்கு அள்ளிக்கொடுத்துவிட்டு, தமிழகத்திற்கு பெயர் அளவிற்கு கிள்ளிக் கொடுப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் எட்வர்ட் ஜெனி காமதேனு இணையத்திடம் விரிவாகவே பேசினார். “தெற்கு ரயில்வே கோடை காலத்தில் திருநெல்வேலி- தாம்பரம், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம், நாகர்கோவில் - தாம்பரம், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி போன்ற சிறப்பு ரயில்களை இயக்கியது. இவ்வாறு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை மட்டும் மீண்டும் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் இயக்கப்பட்ட நாகர்கோவில் - தாம்பரம் மற்றும் திருநெல்வேலி - தாம்பரம் ஆகிய இரண்டு ரயில்களும் தான் சிறப்பு ரயில்களில் அதிக வருவாய் தந்த ரயில்கள் ஆகும். கடும் போராட்டத்துக்கு பின் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் ஆகஸ்ட் மாதம் முடிய இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தெற்கு ரயில்வே இதற்கு முன்பும் இவ்வாறு கேரளாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக நடத்தப்பட்ட தேர்வுக்கு செல்லவசதியாக சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கியது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் திருநெல்வேலி - மைசூர் சிறப்பு ரயில் திருநெல்வேலி பணிமனையில் பராமரிப்பு செய்து திருநெல்வேலியிருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் வழியாக கேரளா பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
ரயில்வே வாரியத்தின் ஆணைப்படி தெற்கு ரயில்வேயில் இயங்கிவந்த தூத்துக்குடி - கோயம்புத்தூர், தூத்துக்குடி-சென்னை ரயில்கள், திருநெல்வேலி - மயிலாடுதுறை ஆகிய லிங்க் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் கேரளாவில் உள்ள ஒரே ஒரு லிங்க் ரயிலான திருவனந்தபுரம் - நீலம்பூர், பாலக்காடு ரயில்கள் தனித்தனி இரண்டு ரயில்களாகவே 2017-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் ஆலப்புழா- தன்பாத் - டாடா நகர் லிங்க் ரயில் ஒரே ரயிலாக இயங்கி வந்தது. இதில் ஆலப்புழா - தன்பாத் தினசரி ரயில், ஆலப்புழா - டாடா நகர் வாரம் இரண்டு முறை ரயில் என தனித்தனி வெவ்வேறு எண் கொண்ட ரயில்களாக இப்போது இயங்குவது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து லிங்க் ரயில் இயக்கத்தில் கேரளாவுக்கு தனி விதியும், தமிழ்நாட்டுக்கு தனி விதியும் பின்பற்றி வருவது கண்கூடாக தெரிகிறது.
திருச்செந்தூர் - பாலக்காடு ரயில்
திருச்செந்தூரில் இருந்து பழநிக்கு பகல் நேர பயணிகள் ரயில் இயங்கி வந்தது. இந்த ரயிலை நீட்டிப்பு செய்யும் போது கோவைக்கு பதிலாக கேரளா லாபியின் அழுத்தத்தின் காரணமாக பாலக்காடு கோட்ட அதிகாரிகள் உள்ளடி வேலையின் பலனாக பாலக்காடுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. கரோனாவுக்கு பின் ரயில்கள் இயக்கும் போது மீண்டும் மதுரை கோட்டம் சார்பாக கோவைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அனைத்து தமிழ்நாட்டு எம்.பி.க்களும் கோரிக்கையும் வைத்திருந்தனர். ஆனால் கேரளா லாபியின் முன்பு தமிழகத்தால் நிற்க முடியாமல் இந்த ரயில் மீண்டும் பாலக்காடுக்கே இயக்கப்பட்டது.
கன்னியாகுமரி - நியூ ஜல்பைகுரிக்கு சிறப்பு ரயில்
கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பாலக்காடு கோவை வழியாக நாகர்கோவில் பணிமனையில் ரயில் பராமரிக்கப்பட்டு கேரளா பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கடந்த ஆண்டு கன்னியாகுமரி - நியூ ஜல்பைகுரி சிறப்பு ரயிலை இயக்கியது. கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழித்தடம் குறைந்த தொலைவு கொண்டது. ஆனால் இந்த வழியாகச் செல்லாமல் கேரள பயணிகளின் வசதிக்காக கேரளா வழியாக ரயில்கள் இயக்குகின்றது.
திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ்
திருநெல்வேலியிருந்து செங்கோட்டை , கொல்லம் , எர்ணாகுளம் வழியாக பாலக்காடுக்கு இயக்கப்படும் ரயில் திருநெல்வேலியில் பராமரிப்பு செய்து இயக்கப்படுகின்றது. கரோனாவுக்கு பிறகு இயக்கப்பட்ட இந்த ரயில் திருநெல்வேலியிருந்து 23:20க்கு புறப்பட்டு தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தம் இல்லாமல் கேரள பயணிகளின் வசதிக்காக காலஅட்டவணை அமைத்து திருநெல்வேலியில் பராமரிப்பு செய்து இயக்கப்படுகின்றது. தமிழகத்தில் பராமரிப்பு செய்து கேரளா பயணிகளுக்கு பயன்படும் வகையில்தான் இந்த ரயிலையும் இயக்குகிறார்கள். இப்படியே விட்டால் தெற்கு ரயில்வே என்பதையே கேரள ரயில்வே என மாற்றினாலும் ஆச்சர்யமில்லை” என அதிரடி கிளப்புகிறார் எட்வர்ட் ஜெனி.