வாக்குமூலங்களைப் பதிவு செய்ததை தவிர எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: அதிரடி காட்டிய ஐகோர்ட்


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சோம ஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து சிவகாஞ்சி போலீஸாருக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலையில் சில சேதங்கள இருந்ததால், புதிதாக தங்க சிலை செய்யப்பட்டது. இதற்காக 100 கிலோ தங்கம் வசூலிக்கப்பட்டும், சிலையில் ஒரு சதவீதம் கூட தங்கம் இல்லை என்று அண்ணாமலை என்பவர் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து விசாரிக்க, சிவகாஞ்சி போலீஸாருக்கு காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டது.

அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை அப்போதைய ஆணையர் வீர சண்முகமணி, திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா , சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா ,ஸ்தனிகர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது 2018ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை, கடந்த 2019-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கூடுதல் ஆணையர் கவிதா , முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு, நன்கொடையாளர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததை தவிர வேறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இவ்வழக்கை மீண்டும் சிவகாஞ்சி போலீஸார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மீது நம்பிக்கை வைத்து இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதித்த நிலையில், நான்கு ஆண்டுகளாக எந்த விசாரணையும் நடத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சிவகாஞ்சி போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை 90 நாட்களில் முடித்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிவகாஞ்சி போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுக்களை முடித்து வைத்தார்.

x