கரோனா காரணமாக இறந்த அங்கன்வாடி ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த தரவு எதுவும் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “அங்கன்வாடி சேவை என்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படும் திட்டம். இதனை செயல்படுத்துவது மத்திய அரசு அல்ல. எனவே கொரோனா வைரஸால் இறந்த அங்கன்வாடி ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் அமைச்சகத்திடம் இல்லை" என்று கூறினார்.
இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் பேக்கேஜின் (பிஎம்ஜிகேபி) கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 50 லட்சம் ரூபாய் விரிவான தனிநபர் காப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் அங்கன்வாடி பணியாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். மார்ச் 2020-ல் அமலான பொது முடக்கத்தின் போது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி / பாலூட்டும் பெண்களுக்கு ரேஷன் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு அங்கன்வாடி பணியாளர்கள் முழுவீச்சில் செயல்பட்டனர்.