தனியார் கல்லூரி உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட மாணவர் திடீர் சாவு!


தனியார் கல்லூரியில் உள்ள உணவகத்தில் கோழிக்கறி சாப்பிட்ட என்ஜினீயரிங் மாணவன் உயிரிழந்த விவகாரம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், கடப்பா பகுதியைச் சேர்ந்தவர் தீராஜ் ரெட்டி(20). இவர் சென்னை சோழிங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் உள்ள விடுதியில் நண்பர்களுடன் தங்கி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிசிஇ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்ற தீராஜ் ரெட்டி மதியம் கல்லூரி உணவகத்தில், கோழிக்கறி சாப்பாடு சாப்பிட்டதாக கூறப்படுகிறது.. சாப்பிட்ட சிறிது நேரத்தில்,மாணவன் தீரஜ்க்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது உடல் சோர்வடைந்தது. உடனே சக மாணவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு தீரஜ்க்கு மருத்துவர்கள் முதல் உதவி அளித்து மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்குச் அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.. அதற்குள் மாணவன் உடல் நிலை மோசமானது. பின்னர் அவரை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டி ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்த போது தீராஜ் ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து செம்மஞ்சேரி போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீராஜ் ரெட்டி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செம்ஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவன் கோழிக்கறி சாப்பிட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரி உணவகத்தில் சிக்கன் சாப்பிட்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

x