மாணவி இறுதிச் சடங்கில் இவர்கள் பங்கேற்கத் தடை: இரவில் ஊருக்குள் வந்து அலர்ட் செய்தது போலீஸ்!


கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறுதிச் சடங்கில் வெளியூர் ஆட்கள், அமைப்பினர் பங்கேற்க காவல்துறை தடை விதித்துள்ளது. இரவோடு இரவாக காவல்துறையினர் மைக் மூலம் மாணவியின் ஊருக்கு சென்று அறிவுறுத்தினர்.

கடலூர் மாவட்டம், பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி அதிகாலையில் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துவிட்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு விரைந்து வந்தனர் பெற்றோர்.

அதற்குள் மாணவியின் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனையும் செய்துவிட்டது பள்ளி நிர்வாகம். இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர், மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதித்தனர். அப்போது, திரண்ட மக்களால் வன்முறை வெடித்தது. பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மகளின் உடலை வாங்க பெற்றோர் சம்மதித்துள்ளதால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நாளை மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்நிலையில், மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூருக்கு காவல்துறையினர் இன்று இரவு வாகனத்தில் வந்தனர். அப்போது, மைக்கில் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், `நாளை நடைபெற உள்ள மாணவியின் இறுதிச் சடங்கில் வெளியூர் ஆட்கள், அமைப்பினர் பங்கேற்க அனுமதி கிடையாது. உள்ளூர் மக்கள், உறவினர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

x