மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் ‘போட்டிங்’ திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதால், விடுமுறை நாட்களில் குவியும் சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆன்மிக சுற்றுலாத்தலமான மதுரையில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அதிகம் விரும்பி செல்லக்கூடிய இடமாக வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் தைப்பூசம் அன்று மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஷ்வரருக்கும் தெப்பத்திருவிழா விமர்சையாக நடத்தப்படும். தமிழகத்தில் நடக்கும் முக்கிய தெப்பத்திருவிழாக்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நடக்கும் இந்த தெப்பத்திருவிழாவை காண சுற்றுவட்டார மாவட்ட மக்கள் திரள்வார்கள். இந்த தெப்பக்குளத்தில் கடந்த காலத்தில் பல்வேறு புகழ்பெற்ற சினிமா திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதும் அடிக்கடி திரைப்படங்களுடைய ஷூட்டிங் நடக்கிறது. இந்த தெப்பக்குளத்தில் காலையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். மாலையில் சென்னை மெரினா பீச் போல் அதிகளவு சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் மக்கள் இந்த தெப்பக்குளத்தில் திரள்வார்கள். கரையோரப்பகுதியில் வீசும் தென்றல் காற்றுக்காகவும், தெப்பக்குளத்தின் நடைபாதைகளில் சென்று அதன் அழகை கண்டு ரசிக்கவும் மக்கள் வந்து செல்வார்கள். அதனால், தெப்பக்குளத்தின் நான்கு கரைகளிலும் பல்வேறு வியாபாரங்கள் களைகட்டும். ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
இந்நிலையில் கடந்த காலத்தை போல் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாமல் அடிக்கடி வறண்டது. அதனால், மாலைநேரத்தில் உள்ளூர் மக்கள், சுற்றுலாப்பயணிகள் வரத்து குறைந்தது. தெப்பக்குளத்தை நம்பியிருந்த வியாபாரிகள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. அதனால், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றில் இருந்து சுரங்க கால்வாய் மூலம் நிரந்தரமாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கெனவே சுரங்கப்பாதை வழியாக தெப்பக்குளத்திற்கு கடந்த காலத்தில் தண்ணீர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், 60 ஆண்டிற்கு பிறகு மாநகராட்சி தெப்பக்குளத்திற்கு மீண்டும் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்ததால் ஆண்டு முழுவதுமே தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. அதனால், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் சுற்றுலாப்பயணிகளையும், உள்ளூர் மக்களையும் மகிழ்விக்கும் வகையில் தெப்பக்குளத்தில் படகுப்போக்குவரத்துவிடப்பட்டது.
18 பேர் அமரக்கூடிய ஒரு படகும், 8 பேர் அமரக்கூடிய படகும் விடப்பட்டது. சுற்றுலாப் பயணிகள், இந்த படகில் தெப்பக்குளத்தின் நாலாபுறமும் சென்று அதன் அழகை கண்டு ரசித்தனர். தெப்பக்குளத்தில் பரப்பும் அதிகம் என்பதால் படகுப்போக்குவரத்து செல்வதற்கு சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் சாதாரண நாட்களில் மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் திரண்டனர். ஆனால், இரண்டு படகுகள் மட்டுமே இயக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், கடந்த காலத்தில் பெடல் படகுகள் இருந்துள்ளன. ஆனால், தற்போது மோட்டார் படகுகள் மட்டுமே உள்ளன. அதனால் கூடுதல் படகுகள் விடுவதற்கு மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்த்தனர். தற்போது தெப்பக்குளத்தில் திடீரென்று படகுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், மதுரை வரும் சுற்றுலாப்பயணிகள், மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் தெப்பக்குளத்திற்கு வரும் உள்ளூர் மக்கள், குழந்தைகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘படகுகளில் இருந்த மோட்டார்கள் பழுதடைந்துள்ளது. மற்ற காரணங்களுக்காக எதுவும் நிறுத்தப்படவில்லை. மோட்டார்கள் பழுதுப்பார்க்கும் பணி நடக்கிறது. ஒரு சில நாட்களில் மீண்டும் படகுப்போக்குவரத்து தொடங்கப்படும். மேலும், கூடுதல் படகுகள் விடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.