பொய் செய்தி பரப்பிய 32 யூடியூப் சேனல்கள்: அதிரடி காட்டப்போகும் கள்ளக்குறிச்சி எஸ்பி பகலவன்!


கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பொய் செய்திகளை பரப்பிய 32 யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் அதிரடியாக கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். பள்ளியிலேயே இந்த சம்பவம் நடந்ததால் நீதி கேட்டு பெற்றோர், ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது. பள்ளியில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பள்ளியில் இருந்து பொருட்களை போராட்டக்காரர்கள் தூக்கிச் சென்றனர். இது தொடர்பாக 350க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவியின் மரணம் குறித்து பல்வேறு யூடியூப் சேனல்கள் செய்திகள் வெளியிட்டன. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பலரை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி பகலவன், மாணவி மரணம் தொடர்பாக போலியான தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 32 யூடியூப் பக்கங்கள், சமூக வலைதள பக்கங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் தவறான தகவல்களை பரப்பியவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொய் செய்திகளை பரப்பிய யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

x