கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடியில் இருக்கும் இரண்டு பன்றி பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீசஸ் நிறுவனத்தில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பிறகு மாவட்டத்தில் உள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வயநாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் பன்றிகள் மொத்தமாக இறந்ததை அடுத்து அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன என்று கேரள கால்நடை பராமரிப்புத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், "இப்போது பரிசோதனை முடிவுகளின்படி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மற்றொரு பண்ணையில் உள்ள 300 பன்றிகளை அழிப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.
நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் சோதனை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டது.