வடமாநில தொழிலாளி தலையில் கல்லைப்போட்டுக் கொலை: போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் வெறிச்செயல்


கொலை

குமரிமாவட்டத்தில் தும்பு ஆலை ஒன்றில் வேலை செய்துவந்த வடமாநிலத் தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கீழமணக்குடி பகுதியில் ஏராளமான தும்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலைசெய்து வருகின்றனர். இதில் சித்தன் குடியிருப்பு பகுதியில் உள்ள தும்பு ஆலை ஒன்றில் வடமாநிலத்தைச் சேர்ந்த நானக்‌ஷா முன்னா(35) என்பவரும், அவரது நண்பர் ரமேஷ் என்பவரும் தங்கி வேலை செய்து வந்தனர்.

இன்று காலையில் பணிக்குவர வேண்டிய நானக்‌ஷா முன்னா பணிக்கு வரவில்லை. அவர் தங்கியிருந்த வீட்டின் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் கதவு துவாரம் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது நானக்‌ஷா முன்னா வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து தென் தாமரைக்குளம் போலீஸாருக்கும், தும்பு ஆலையின் உரிமையாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது முன்னாவின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொன்றுவிட்டு அவரது நண்பர் தலைமறைவானது தெரியவந்தது.

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் நேற்று இரவு நானக்‌ஷா முன்னாவும், ரமேஷூம் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நள்ளிரவில் திடீர் என தூக்கத்தில் இருந்து விழித்த ரமேஷ், முன்னாவின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலைசெய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்பது தெரியவந்தது. ரமேஷை போலீஸார் தேடிவருகின்றனர். வடமாநில வாலிபர் குமரிமாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x