2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற அரசு பள்ளி மாணவி: ஆசிரியை காரணமா?


மாமல்லபுரம் பகுதியில் ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குச் செய்முறைத் தேர்வு நடைபெற்றது. இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறையில் நடைபெற்ற செய்முறைத் தேர்வில் மாணவி சினேகா கையில் பிட் பேப்பர் வைத்துக் கொண்டு, தேர்வு எழுத முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட ஆசிரியை மாணவிக்கு அறிவுரை கூறி கண்டித்துள்ளார். மேலும், நாளை பள்ளிக்கு வரும் போது கண்டிப்பாகப் பெற்றோரை அழைத்து வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பெற்றோரை அழைத்து வருவதற்கு பயந்து மாணவி சினேகா திடீரென இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவியைப் பள்ளி ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மாணவி சினேகா மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி தற்கொலை முயற்சி தொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வேதனைக்குரியது என்று கூறிய கல்வியாளர்கள், தற்கொலை தீர்வு அல்ல என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் அரசு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்றனர்.

x