`14,098 புகார்கள் வந்துள்ளன; 15 நாட்களுக்குள் விளக்கவும்'- சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு அரசு உத்தரவு!


சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் மீது 14,098 புகார் மனுக்கள் வந்திருப்பதாகவும், இந்த புகார்கள் குறித்து 15 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக முறைகேடு குறித்து பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து விசாரணை நடத்துவதற்காகத் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஒரு குழு அமைத்திருந்தது. அந்த குழு சிதம்பரம் கோயிலுக்கு விசாரணைக்கு வந்தபோது தீட்சிதர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 20 மற்றும் 21-ம் தேதிகளில் கடலூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக் குழுவின் முன்பு கோயில் நலனில் அக்கறை கொண்ட பக்தர்கள் புகார் மனுக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் மீது ஏராளமான புகார்கள் குவிந்தன.

இந்த புகார்களை அடிப்படையாக வைத்து இந்து சமய அறநிலையத்துறை ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் 19,405 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில், 14,098 மனுக்கள் கோயிலில் குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கடலூர் உதவி ஆணையர் அலுவலகத்திலிருந்து நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை நான்கு தொகுப்புகளாக உருவாக்கப்பட்டு அதைக் கோயில் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த தொகுப்பில், ‘பக்தர்களின் காணிக்கைகளுக்கு கோயிலில் ரசீது வழங்கப்படுவதில்லை. பத்தாயிரம் கொடுத்தால் பிரசாதம் வீடு தேடி வரும் என ரசீது இல்லாமல் வசூலிக்கின்றனர். நடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவர் அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் பிற கோயில்களில் உள்ளதைப் போன்று உண்டியல் நிறுவவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தரமான பிரசாத கடைகளைக் கோயிலுக்குள் அமைக்க வேண்டும். அனைத்து விதமான பூஜை, அர்ச்சனைகளுக்கு ரசீது வழங்க வேண்டும். பெண்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படுகிறார்கள். ஆயிரம் கால் மண்டபம் நட்சத்திர விடுதி போல பயன்படுத்தப்படுகிறது. சிதம்பரம் கோயில் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்’ உள்ளிட்ட சுமார் 25 வகையான புகார்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார்கள் குறித்து 15 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் தீட்சிதர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

x