புதுடெல்லி: பாஜக சித்தாந்தவாதி சியாமா பிரசாத் முகர்ஜியின் 123-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மரியாதை செலுத்தினார்.
இது குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறும்போது, "தனது துணிகர தேசியவாத சிந்தனையால் இந்தியா பெருமை கொள்ள செய்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி. தாய்மண்ணுக்கு அவர் செய்த தியாகமும் அர்ப்பணிப்பும் எக்காலத்திலும் மக்கள் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தும்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான பாரதிய ஜன சங் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் அவர். இந்திய குடிமக்கள் மீது அன்றைய அரசு விதித்த கட்டுப்பாடுகளை எதிர்த்து ஜம்மு காஷ்மீரில் போராடியதற்காக கைது செய்யப்பட்டவர். அதன் பின்னர் 1953-ல் அவர் காலமானார்.
அன்றே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை எதிர்த்து அவர் போராடினார். முகர்ஜியின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக எனது அரசு 2019-ல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து அன்னாருக்கு சமர்ப்பித்தது. இவ்வாறு மோடி கூறினார்.