மத்திய அரசின் 5 சதவீத ஜிஎஸ்டி: ஆவின் பொருட்கள் விலை அதிரடியாக உயர்வு


தமிழகத்தில் ஆவின் தயிர் மற்றும் நெய் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்பட்டது.

இதில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி, மீன், பன்னீர், தேன், கோதுமை மாவு மற்றும் பிற தானியங்கள், தயிர் உள்ளிட்ட பால்பொருட்களுக் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.50, ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் தயிர் 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் தயிர் 25 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளது.
பிரீமியம் தயிர் ஒரு லிட்டர் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய் 538 ரூபாயில் இருந்து 580 ரூபாயாக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் நெய் 275 ரூபாயில் இருந்து 290 ரூபாயாக அதிகரித்துள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

x