கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரண வழக்கு: சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உதவியாக தனிப்படை அமைப்பு


கள்ளக்குறிச்சி கலவரச் சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உதவியாக 18 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17-ம் தேதி கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளியைச் சூறையாடியதுடன், 40-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைத்தனர். இந்த கலவரத்தில் ஏராளமான போலீஸாரும் காயமடைந்தனர்.
இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் வாட்ஸ் அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் ஒன்று கூடி கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், கள்ளக்குறிச்சி கலவரச் சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விசாரணையைத் துவங்கவுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைக் கையாள 18 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உதவியாக அமைத்து இன்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அந்த குழுவில் 6 டிஎஸ்பிக்கள், 9 ஆய்வாளர்கள், 3 சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். சிறப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைமை வகிக்கும் சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினபு முன்பு இன்று காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குழுவில் இடம்பெற்றுள்ள டிஎஸ்பிக்கள் மற்றும் ஆய்வாளர்கள் மைக் பொருத்தப்பட்ட அலுவலக வாகனத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், வாகனத்திற்கு தேவையான எரிபொருள் முன்கூட்டியே நிரப்ப வேண்டும். அதுமட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளைத் தவிர பிற அதிகாரிகளை விசாரணைக்காக அனுப்பக்கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பேரும் அடுத்த இரண்டு வார காலத்திற்கு சிறப்பு புலனாய்வு குழுவிற்கு உதவியாக பணிபுரிவதற்கு தயார் நிலையில் வர வேண்டும் என டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனிப்படையினர் அனைவரும் கரோனா விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

x