கள்ளக்குறிச்சி வன்முறை எதிரொலி: உளவுத்துறை ஐஜி அதிரடி இடமாற்றம்!


உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் வேலன்

உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் போராடி வந்தனர். 3 நாட்கள் போராட்டம் நடந்து வந்த நிலையில், அதாவது, 17-ம் தேதி வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. தமிழக உளவுத்துறையின் தோல்வியே வன்முறைக்கு காரணம் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் மாற்றப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜியாக செந்தில் வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி காவல்துறை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய்யும், மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்பியாக மகேஷ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு உதவி ஐஜியாக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏஎஸ்பிக்கள் சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் சிவாச் ஆகியோர் எஸ்பிக்களாக உதவி உயர்வு பெற்றுள்ளனர்.

x