`ரணத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது'- மகனுக்காக முதல்வர் இல்லம் நோக்கி குமரி தந்தை நடைபயணம்!


உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகேட்டு மனு ரசீதுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து, முதல்வர் இல்லம் நோக்கி தனி ஒருவனாக நடைபயணம் செய்து கொண்டிருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூறைச் சேர்ந்த அருள்ராஜ்.

நாகர்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகில் இன்று காலையில் தன் கோரிக்கையையே பதாகையாக ஏந்தியவாறு சென்ற அருள்ராஜிடம் காமதேனு இணையத்திற்காகப் பேசினோம். “மனநலம் பிறழ்ந்த மகனை வைத்துக்கொண்டு தவியாய் தவிக்கிறேன். ஆனால் என் மகனுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டதற்கும் இந்த சமூகமே காரணம் ஆனது. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்றக்கோடு பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் என் மகன் பத்தாம் வகுப்பு படித்துவந்தான். அதிக மதிப்பெண், தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கு டிசி கொடுத்து வேறுபள்ளிக்குப் போகச்சொல்லி நிர்பந்தித்தது பள்ளி நிர்வாகம். இதில் என் மகன் ஷிபுவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அவன் பரீட்சையும் எழுதவில்லை. அவன் வாழ்வும் மன நோயாளியாகி சிக்கலில் சிக்கிக்கொண்டது.

ஒருகட்டத்தில் என் மகன் மிகவும் மூர்க்கத்தனமாக மாறிவிட்டான். வீட்டில் வைத்துப் பார்க்கமுடியாமல் கன்னியாகுமரியில் உள்ள அரசு உதவிபெறும் ஒரு இல்லத்தில் சேர்த்தேன். அங்கிருந்து இதுவரை மூன்றுமுறை தப்பியோடிவிட்டான். வீட்டில் இருக்கும்போது மிகவும் மூர்க்கத் தனமாக நடந்து கொள்வான். நடு இரவில் முழித்து வீட்டை இடிக்க ஆரம்பித்துவிடுவான். எங்களைத் துரத்துவான். இது எதுவுமே அவன் தவறு இல்லை. அவனுக்குள் இருக்கும் மனநோய் தான் அந்தச் சூழலுக்கு தள்ளுகிறது. என்றாவது வீட்டில் மனநோயாளிகளை வைத்திருக்கும் குடும்பத்தைப் பற்றி யாரும் நினைத்துப் பார்த்ததுண்டா? சொந்தமகனே எப்போது கொல்லுவான் என பயந்து படுக்கும் பொழுதுகளின் ரணத்தை வார்த்தைகளால் விளக்கமுடியாது.

மனநோயாளிகளுக்கு அரசு மாவட்டம் தோறும் பராமரிக்கும் முகாம்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மனநோய் சார்ந்த பிரச்சினை உள்ளோரை எதிர்கொள்ளும் குடும்பச் சூழலை விளக்கி உங்கள் தொகுதியில் முதல்வர் பிரிவுக்கு பல மனுக்கள் அனுப்பினேன். ஆனால் தீர்வு இல்லை. மனநலம் பாதிப்போரை குடும்பத்தில் வைத்து பராமரித்து, அதனால் நலிவுற்ற குடும்பங்களுக்கு மாதாந்திர இழப்பீடு, அரசால் மனநல காப்பகங்கள் நிர்வகிப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் இந்த நடைபயணம் செல்கிறேன். இதை உங்கள் தொகுதியில் முதல்வர் பிரிவுக்கும் கோரிக்கையாக அனுப்பியிருந்தேன். அந்த மனு ரசீதுடன் தான் நடந்து செல்கிறேன்” என்றார்.

முன்னதாக கடந்தவாரமே இந்த நடைபயணத்தை தொடங்கிய அருள்ராஜ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் இந்நேரத்தில் கோரிக்கை நடைபயணம் மேற்கொள்வது பொருத்தமாக இருக்காது என தன் பயணத்தையே தள்ளிவைத்ததாகவும், அதனால் இன்று நடைபயணத்தை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

x