வனவிலங்குகளை வேட்டையாடி பாகங்களை விற்பனை செய்யும் கும்பலா?: கொடைக்கானலிடம் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை


கொடைக்கானலில் விடுதி எடுத்து யானை தந்தங்களை விற்பனை செய்து வந்த எட்டு பேரை இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் கைது செய்த நிலையில், அதில் தொடர்புடைய மேலும் ஒருவரை இன்று கைது செய்தனர்.

கொடைக்கானலில் விடுதி எடுத்து யானை தந்தங்கள் விற்பனை செய்ய முயன்ற எட்டு பேரை வனத்துறையினர் கடந்த 18-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இதில் கைதான கேரளாவைச் சேர்ந்த அப்துல்ரசீத், சிபின்தாமஸ் ஆகியோர் மீது கேரளாவில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. சிபின்தாமஸ் பெருமாள்மலை அருகே தங்கும் விடுதி நடத்தி வருவதாகவும், அங்கு பல்வேறு தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

கைதானவர்களிடம் இருந்து இரண்டு யானைத் தந்தங்கள், ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் இவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது, கொடைக்கானல் பாலமலையைச் சேர்ந்த சார்லஸ் தப்பி ஓடினார்.

இந்நிலையில், சார்லஸை வனத்துறையினர் தேடி வந்த நிலையில், அவர்களுக்கு இடம் கொடுத்த பெருமாள்மலையைச் சேர்ந்த முகமதுசபிக்கை (30) வனத்துறையினர் இன்று கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சார்லஸிடம் கொடுத்து சமைத்துக் கொடுக்க சொன்னதால் அங்கு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தாகத் தெரிவித்தார்.

இவர் அளித்த வாக்குமூலத்தில் படி, இந்த கும்பலுக்கு வனவிலங்குகளை வேட்டையாடி அதன் பாகங்களை விற்பனை செய்வதிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x