சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதற்கான விவரம் குறித்த நோட்டீஸை விருத்தாசலம் அருகே பெரிய நெசலூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு அதிகாரிகள் ஓட்டினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்தார். 13-ம் தேதின்று மாணவியின் உடல் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அன்றைய தினம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர் அந்த பிரேத பரிசோதனையை ஏற்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு ஒன்றையும் மாணவியின் தந்தை தொடர்ந்திருந்தார். அதில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதில் தங்கள் தரப்பில் ஒரு மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், மாணவியின் தந்தை மற்றும் வழக்கறிஞர் உடன் இருக்கலாம் என்று அனுமதி அளித்திருந்தது. மறு பிரேத பரிசோதனை செய்வதற்காக உயர்நீதிமன்றம் ஒரு மருத்துவக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது.
ஆனாலும், அதனை ஏற்காத மாணவியின் தந்தை நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யலாம் என்று உத்தரவிட்டது. அதனையடுத்து உயர் நீதிமன்றம் அமைத்திருந்த மருத்துவ குழுவினர் நேற்று மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தயாராக இருந்தனர்.
ஆனால், மாணவியின் தந்தை மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்டவர்கள் பிரேத பரிசோதனை நடைபெறும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை. அதையடுத்து இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை மீண்டும் அரசு தரப்பில் நாடப்பட்டது. உச்சநீதிமன்றம் தடையில்லை என்று கூறி விட்டதால் மாணவியின் தரப்பில் யாரும் இல்லை என்றாலும் மறு பிரேத பரிசோதனை நடத்தப்படலாம். அந்த நேரத்தில் மாணவியின் தந்தை மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்ட குடும்பத்தினர் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
அதனை அடுத்து பெரிய நெசலூரில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் மதியம் ஒரு மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெறும் என்று அறிவிப்பை அவர்கள் வீட்டில் ஒட்டினர். மாலை மூன்று முப்பது வரையிலும் அவர்களுக்காக எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்கள் யாரும் வராததால் மறு பிரேத பரிசோதனை அவர்கள் இல்லாமலேயே நடந்து முடிந்தது.
பிரேத பரிசோதனை நடந்து முடிந்த தகவல் குறித்த நோட்டீஸை நேற்று இரவு மீண்டும் பெரிய நெசலூர் சென்று அவரது வீட்டில் ஒட்டினர். நோட்டீஸ் வெட்டப்பட்ட விவரத்தை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்து அவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டனர்.
உங்கள் மகள் உடல் மறு பிரேத பரிசோதனை முடிந்து விட்டது, வந்து உடலை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவியின் உடலை அவரது பெற்றோர்கள் என்று பெற்றுக் கொள்வார்களா? அல்லது அவர்களின் சட்டப் போராட்டம் தொடருமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் அந்த வழக்கின் விசாரணை மற்றும் நீதிபதியின் உத்தரவுக்கு பிறகே மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர்கள் முன் வருவார்கள் என்று கூறப்படுகிறது.