சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த வழக்கில் சிபிசிஐடி எஸ்பி ஜியாவுல் ஹக் தலைமையிலான விசாரணைக் குழுவினர் இன்று தங்கள் விசாரணையை தொடங்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 17-ம் தேதி அன்று அந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது.
இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் இரவு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி எஸ்பி ஜியாவுல்ஹக் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இன்று கள்ளக்குறிச்சிக்கு வந்த அக்குழுவினர், அங்கிருந்து கனியாமூர் சென்று சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி, மாணவி தங்கியிருந்த விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மாணவி மாடியில் இருந்து விழுந்ததாக கூறப்படும் இடங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது மாணவி போன்று ஒரு உருவ பொம்மையை தயாரித்து அதனை 2 மற்றும் 3-வது தளத்திலிருந்தும், கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்தும் மூன்று முறை கீழே தள்ளி ஆய்வு செய்தனர்.
மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் இடத்தின் தன்மை, விழுந்த இடத்தின் தூரம் உள்ளிட்டவைகள் கள ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாணவி தங்கியிருந்த விடுதியின் அறை மற்றும் அவர் பயன்படுத்திய பகுதிகளும் ஆய்வு செய்யப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு வந்த சிபிசிஐடி குழுவினர் சுமார் 3 மணி நேரம் பள்ளி வளாகத்தில் இருந்து ஆய்வு மேற்கொண்டதுடன் விசாரணையும் நடத்தினர்.
அதன்பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று மாணவியின் உடலை பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.