கள்ளக்குறிச்சி கலெக்டர், எஸ்பி திடீர் மாற்றம்: மாணவி மரணம், வன்முறையால் தமிழக அரசு அதிரடி


கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார்

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலமாக மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். தனியார் பள்ளியில் வன்முறை நடைபெற்றதற்கான காரணம் என்ன, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்குக் குழு அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர்

இந்த ஆய்வில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. ஒரு சிறப்பு முகாமை ஏற்படுத்தி மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்க தமிழக முதல்வர் ஏற்பாடு செய்ய உள்ளார். கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறைத் தொடர்பாகச் சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை டிஜிபி சைலேந்திர பாபு அமைத்துள்ளார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், `மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையராக பணிபுரியும் பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தமிழக அரசின் வேளாண்துறையின் கூடுதல் இயக்குநராக இருக்கும் ஷ்ரவன் குமார் ஜெடாவத் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனவும் தெரிவித்துள்ளார்.

x