ஒடிசாவில் மழை பெய்ததால் தன் தம்பியோடு பள்ளியில் ஒதுங்கிய சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது. இதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க பள்ளி மாடியில் இருந்து சிறுமி குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கியான்கஞ்ச்ஹர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியும், அவரது தம்பியும் ஜஜ்பூரில் உள்ள அக்கா வீட்டிற்கு பஸ்சில் ஞாயிறன்று சென்றனர். ஜஜ்பூரில் உள்ள சுகுந்தா ஷார்மிட் பகுதியில் இரவு பஸ்சை விட்டு அவர்கள் இறங்கிய போது, மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் அவர்கள் அங்கு மழைக்கு ஒதுங்கினர். ஆனால், மழை வலுவாக பெய்ய ஆரம்பித்தது.
அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல், மழையில் நனையாமல் இருக்க அருகில் உள்ள பள்ளியில் ஒதுங்குமாறு சிறுமியும், அவரது தம்பியிடமும் கூறியுள்ளனர். மழை நின்ற பிறகு நீங்கள் போகலாம் என்று கூறியுள்ளனர். அதை நம்பி அவர்கள் இருவரும் பள்ளிக்கூடத்திற்குள் ஒதுங்கியுள்ளனர்.
அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் சிறுமியின் தம்பியைக் கடுமையாக தாக்கியது. இதன் பின்அந்த சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க அந்த சிறுமி, பள்ளி மாடியில் இருந்து குதித்துள்ளார். இதனால் அவர் படுகாயமடைந்தார். அவரது தம்பி இதைக்கண்டு கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார். இதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதைக்கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்த சிறுமியையும், கும்பலால் தாக்குதலுக்குள்ளான சிறுவனையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த 5 பேர் கொண்ட கும்பலை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.