பள்ளி நிர்வாகம் கடுமையாகக் கண்டித்ததாகக் கூறி மாணவர் ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று மாலை இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பள்ளி நிர்வாகம் மாணவனைக் கடுமையாகக் கண்டித்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இரண்டாவது மாடியிலிருந்து குதித்த அந்த மாணவனுக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன் பின் மேல் சிகிச்சைக்காகச் சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கக் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கல்யாண் சம்பவம் நடைபெற்ற தனியார் பள்ளிக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தமிழகத்தையே உலுக்கிப் போட்டுவிட்டது. பள்ளி மாணவியின் மரணத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்த பள்ளி முழுவதுமே சூறையாடப்பட்டது. அதுபோல காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பள்ளி வளாகம் முழுவதும் இரவு நேரத்திலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ கனிமொழி, மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி அமைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.