கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் உலோகக் கொக்கி கொண்ட உள்ளாடைகள் அணிந்திருந்ததாக, அவற்றைக் கழட்டச் சொன்ன விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்திற்கு கேரள அமைச்சர் பிந்துகடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் கேரள மாநிலம், கொல்லத்தில் மார்த்தோமா கல்வி நிறுவனத்தில் தேர்வெழுதச் சென்ற மாணவிகள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது பீப் சத்தம் கேட்டது. தங்களது உள்ளாடையில் இருக்கும் உலோகக் கொக்கியில் இருந்து அந்த சத்தம் வருகிறது என்று மாணவிகள் விளக்கிச் சொன்னார்க.ள ஆனாலும், அனைத்து மாணவிகளின் உள்ளாடைகளும் கழட்ட நிபந்திக்கப்பட்டனர். மாணவிகள் உள்ளாடையைக் கழட்டிய பின்பு தான் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். இது சர்ச்சையானது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் ஒருவர் போலீஸிலும் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவத்திற்கு கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் பிந்து கூறுகையில் “இது மிகப்பெரிய தவறு. இதனால் தேர்வெழுதிய மாணவிகள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். அடிப்படை மனித உரிமைகளைக்கூட கருத்தில் கொள்ளாமல் நடத்தப்பட்ட செயல் இது. இவ்விஷயத்தில் கேரள அரசு, தன் அதிருப்தியை மத்திய அரசுக்கு தெரிவிக்கும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் எச்சரிக்கையும் கொடுக்கும் ”என்றார்.
இதனிடையே பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் சடையமங்கலம் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டத்தின் 354, 509 வது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் இவ்விஷயத்தை கையில் எடுத்து விசாரணை நடத்திவருகிறது.
இதனிடையே சம்பந்தப்பட்ட மார்த்தோ கல்வி நிறுவனம்," இந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீட் தேர்வை நடத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தான் பதில்சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.