பிரதமர் மோடி அரசில் தொழிலாளர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் தொழிலாளர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி, குரு தேக் பகதூர் நகரில் தினக்கூலி தொழிலாளர்களுடன் சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடினார். இந்நிலையில் அந்த வீடியோவை இன்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: "நாட்டின் தொழிலாளர்கள் இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்கள். பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் அவர்கள் பயங்கர கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். தினக்கூலி தொழிலாளர்கள் ஒரு நாளின் வருமானத்தைக் கொண்டு 4 நாட்கள் தங்கள் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். அவர்களிடம் சேமிப்பு இல்லை, வட்டி செலுத்தும் சுமையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஜிடிபி நகரில் உள்ள தெரு வியாபாரிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் போராட்டங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எதிர்கால இந்தியாவை கட்டியெழுப்புபவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. இந்தியாவின் கடின உழைப்பாளிகளான தொழிலாளர்களுக்கு அவர்களின் முழு உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மரியாதை கிடைப்பதை நான் உறுதி செய்வேன். இதுவே எனது தீர்மானம்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராகுல் காந்தி பகிர்ந்துள்ள வீடியோவில், கட்டுமானத் தொழிலாளியுடன் இணைந்து அவர் பணிபுரிவதை காணலாம். இதற்கிடையே ராகுல் காந்தி, இந்திய ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) குழுவினரை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக தங்களுக்கு போதுமான ஓய்வு கிடைப்பதில்லை என ரயில் ஓட்டுநர்கள் ராகுல் காந்தியிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

x