கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்ததாக 4 கல்லூரி மாணவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மெரினாவில் 200-க்கு மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13-ம் தேதி பிளஸ் 2 மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இறந்த மாணவிக்கு நீதி கேட்டு கடந்த 17-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், மாணவி படித்த பள்ளி சூறையாடப்பட்டது. மேலும் பள்ளியில் இருந்த கல்விச் சான்றிதழ்கள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். வன்முறையாளர்களின் தாக்குதலில் சுமார் 50-க்கு மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக சுமார் 302 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது தவிர சமூக வலைதளங்கள் மூலமாக வன்முறையைத் தூண்டும் வகையில் வதந்தியைப் பரப்பியதற்காக இதுவரை 10-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வாட்ஸ் குழு அமைத்து வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக சென்னையைச் சேர்ந்த 4 மாணவர்களை அண்ணாசாலை மற்றும் திருவல்லிக்கேணி போலீஸார் இன்று பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக சமூக வலைதளம் மூலம் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதன் அடிப்படையில் விவேகானந்தர் இல்லம் முதல் கண்ணகி சிலை வரை 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸார், அப்பகுதியில் வாகனத் தணிக்கையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் வாட்ஸ் குழு மூலமாக தவறாக வதந்தியைப் பரப்பி வன்முறை தூண்டும் வகையில் செயல்படுவோரை சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், இது போன்ற தவறான வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.