தமிழக அரசின் உத்தரவை மீறி விடுமுறை அளித்த 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. மாணவியின் இறப்புக்கு நீதிகேட்டு பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 17-ம் தேதி நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. பள்ளியில் இருந்த பொருள்கள் சூறையாடப்பட்டன. இதன்காரணமாக அந்தப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கலவரத்தை தொடர்ந்து நேற்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகள் மூடப்படும் என அறிவித்தனர்.
இந்த நிலையில் தங்களின் அனுமதியில்லாமல் பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று பள்ளிகள் மூடப்பட்ட மற்றும் செயல்பட்ட தனியார் பள்ளிகளின் விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டார்.
அதில், திருநெல்வேலி, கரூர், அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100 சதவீதம் பள்ளிகள் செயல்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 11,335 பள்ளிகளில் 987 பள்ளிகள் மட்டுமே செயல்படவில்லை அந்த வகையில் தமிழகத்தில் 91 சதவிகிதம் பள்ளிகள் இயங்கியுள்ளன 9 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கவில்லை .
இந்தப் பள்ளிகள் அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் எனவும்,பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.