`இது பொய்யான வீடியோ; யாரும் நம்ப வேண்டாம்'- கள்ளக்குறிச்சி எஸ்பி விளக்கம்


"மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம்" என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் சக்தி இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் பள்ளியில் இறந்து கிடந்தார். மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பள்ளி முன்பு திரண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். திடீரென இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்தது. பள்ளியின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பள்ளியின் தாளாளர் மகன் இரவில் பள்ளிக்குள் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்பந்தமாக நள்ளிரவில் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது சம்பந்தமாக விசாரணை செய்தபோது இந்த வீடியோ சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையம், சிங்கபுரம் அரசு பள்ளியில் உள்ள மடிக்கணினியை திருட முயற்சி செய்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ என்று தெரிய வருகிறது.

இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பொய் செய்தியை மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற சட்டம், ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

x