நகைக்கு பூஜை போட வந்த பெண்... கோயிலை சுற்றி வந்தபோது அதிர்ச்சி: தப்பிக்க முயன்ற குஜராத் பூசாரி சிக்கினார்


கோயிலில் வைத்து பூஜை போட பெண் ஒருவர் நகைகளை கொண்டு வந்துள்ளார். கோயிலை பெண் சுற்றி வந்தபோது குஜராத் பூசாரி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் ரங்கநாதன் அவின்யூவில் உள்ள ஸ்தாம்பர் மூர்த்தி ஜெயின் கோயிலில் அதே பகுதியை சேர்ந்த மீனா (54) என்பவர் பூஜை செய்து வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி 46 சவரன் தங்க நகைகளுக்கு பூஜை போடுவதற்காக எடுத்து சென்றுள்ளார் மீனா. பூஜைக்காக நகையை அங்கு வைத்துவிட்டு கோயிலை சுற்றி வந்துள்ளார். அப்போது, நகைகள் மாயமாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பூசாரியை தேடியபோது அவரும் மாயமாகியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மீனா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கோயில் பூசாரி தனது நண்பர் ஒருவரின் உதவியால் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செல்போன் எண்ணை கண்டுபிடித்த காவல்துறையினர், செல்போன் டவர் மூலம் பூசாரி கோயம்பேட்டில் இருப்பது தெரியவந்தது. அப்போது, பேருந்தில் தப்பி செல்ல முயன்ற பூசாரியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குஜராத்தை சேர்ந்த விஜய் ராவல் (38) என்பவர் தனது நண்பன் மகேந்திரனுடன் நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து 46 சவரன் தங்க நகைகளை மீட்ட காவல்துறையினர், மீனாவிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக இருக்கும் பூசாரியின் நண்பரை தேடி வருகின்றனர்.

x