தமிழகத்தில் யாருக்கெல்லாம் மின் கட்டணம் உயர்கிறது?- பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி


தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, யாருக்கெல்லாம் இந்த மின் கட்டணம் உயர்வு இருக்கிறது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மின்கட்டணம் உயர்வு தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர், “501-600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள் 3 லட்சத்து 14 ஆயிரம் பேர். அவர்களுக்கு 155 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 601-700 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள் மாதம் 275 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். 801-900 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் 565 ரூபாய் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டும். 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் கூடுதலாக ஒரு யூனிட் மின்சாரம் பயன்படுத்தினாலும், மொத்த யூனிட்டுகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது. 500 யூனிட்டிற்கு 1,130 ரூபாய் கட்டி வந்தவர்கள், கூடுதலாக ஒரு யூனிட் அதிகரித்து 501 யூனிட் பயன்படுத்தியதால் 1,786 ரூபாய் கட்டினார்கள். அதற்குக் கூடுதலாக 656 ரூபாய் சேர்த்துக் கட்டிவந்தார்கள். அதைச் சரி செய்வதற்கு உத்தேசித்திருக்கிறோம்.

கிராமத்தில் உள்ள நூலகங்களில், வணிகப் பயன்பாட்டில் மின் கட்டணம் இருந்து வந்தது. தற்போது அவற்றிற்கு வீட்டுப் பயன்பாட்டில் மின் கட்டணம் வசூலிக்கப்படும். பிற தாழ்வழுத்த மின்கட்டணத்தைப் பொறுத்தவரை, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நுகர்வோர்களுக்கு 50 பைசா மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூணிட் ஒன்றிற்கு ஒரு ரூபாய் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு 250 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். அதற்கு மேல் பயன்படுத்துவோர்களுக்கு ஏற்கெனவே வசூல் செய்த தொகையைவிட யூனிட் ஒன்றிற்கு 70 பைசா உயர்த்தப்படுகிறது. தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றிற்கு 1.15 ரூபாய் உயர்த்தப்படும். உயர் மின்னழுத்தத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றிற்கு 40 பைசா உயர்த்தப்படும். ரயில் மற்றும் அரசுக் கல்வி நிறுவனங்களுக்கான கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 65 காசுகள் உயர்த்தப்படும். உயர் அழுத்த வணிகப் பிரிவு நுகர்வோர்களுக்கான யூனிட் ஒன்றிற்கு 50 காசுகள் உயர்த்தப்படும்.

மின் மானியத்தைத் தாமாக விட்டுக் கொடுக்கும் திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்திற்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் தாமாக விட்டுக் கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ‘ஏன் எல்லோருக்கும் இலவசமாக மின்சாரம் கொடுக்கிறீர்கள். நாங்களே இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுக்கலாம் என்று இருக்கிறோம். எப்படி விட்டுக் கொடுப்பது எனத் தெரியவில்லை’ எனப் பொதுமக்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கான சிறப்புத் திட்டமாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்கள் கட்டாயமாக இணையவழியில் செலுத்த வேண்டும். ஒரு வீட்டிற்கு ஒரு மின்இணைப்பு என்ற திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது. ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை, குத்தகை விடப்பட்டதைத் தவிர மற்றவர்களுக்கு மாதம் 250 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்'' என்றார்.

x