மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டிகளுக்கு தனி அடையாள எண் மற்றும் தனி சீருடை வழங்கி சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சுமார் 13 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்ற பெயர் பெற்றது. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள், சென்னை மற்றும் வெளியூர் மக்கள் வந்து செல்லும் மிகச்சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. மேலும் இங்கு குவியும் ஏராளமான மக்களை மகிழ்விக்க குதிரை சவாரியும் உள்ளது. ஒரு ரவுண்டுக்கு 50 முதல் 200 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மெரினா கடற்கரைக்கு குடும்பத்துடன் வருபவர்கள் தங்களது குழந்தைகளை குதிரையில் சவாரி ஏற்றி மகிழ்விக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மெரினாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மேலும் குதிரையில் ஏறும் குழந்தைகள், சிறுவர்கள் காணாமல் போக வாய்ப்பு ஏற்படுவதுடன் பல்வேறு குற்றங்கள் நடக்கவும் எதுவாக அமைகிறது. இதனால் குதிரையை வைத்து தொழில் செய்யும் நபர்களை வரைமுறைப்படுத்தவும், அவர்களை கண்காணிக்கவும் சென்னை காவல்துறை புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை ஆணையர் பிரபாகர் மற்றும் மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் மேற்பார்வையில் மெரினாவில் மொத்தம் எத்தனை குதிரை ஓட்டிகள் உள்ளனர். அவர்களது பெயர் விவரம் அடங்கிய பட்டியலை தயாரித்து அதன் மூலம் அவர்களுக்கு தனி அடையாள எண்ணுடன் கூடிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவர்களுக்கு சாம்பல் நிற பேண்ட், மஞ்சள் நிற டீ ஷர்ட், மஞ்சள் நிற தொப்பியுடன் கூடிய தனி சீருடை வழங்கப்பட்டுள்ளது. குதிரை ஓட்டிகள் தொடர்பாக தனி பதிவேட்டை தயார் செய்து அதனை பராமரித்து வருகின்றனர்.
மெரினா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் குதிரை ஓட்டுபவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் நேரில் வரவழைக்கப்பட்டனர். பின்னர் மயிலாப்பூர் உதவி ஆணையர் சீனிவாசன் மெரினாவுக்கு வரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று குதிரை ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.