`பள்ளியை திறக்க வேண்டும்'- வன்முறை குறித்து ஆய்வு செய்ய வந்த அமைச்சர்களிடம் பெற்றோர்கள் வலியுறுத்தல்


கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் சேதமடைந்த பள்ளியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ. வேலு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவம் காரணமாக அந்த தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் பள்ளி வகுப்பறைகள் சூறையாடப்பட்டன. பள்ளி பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் தமிழக அரசு கலவரத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வன்முறை தொடர்பாகப் பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவியின் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ”பள்ளி மாணவியின் உயிரிழப்பிற்கு எதிராக நடைபெற்ற கலவரம் திட்டமிட்டு நடைபெற்றதாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தில் வன்முறையாளர்களைக் கண்டறிந்து அவர்களிடம் இழப்பீடுகளை வசூலிக்க வேண்டும். மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய வேண்டும்” என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ. வேலு, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பொதுப்பணித்துறையினர், காவல்துறையினர் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது, பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கலவரம் ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு நடைபெற்ற நிலையில், சேதமதிப்பீடு செய்வதற்காக தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே வருவாய்த்துறையினர் சேதம் குறித்து ஆய்வு செய்த நிலையில், அமைச்சர்களும் ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆய்வைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாணவியின் உடல் மறுபிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ள நிலையில், உடற்கூறு விவரங்களையும் அமைச்சர்கள் கேட்டறிவார்கள் எனத் தெரிகிறது.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “கள்ளக்குறிச்சி சம்பவத்தை பொறுத்தவரை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக விடுமுறை அளிக்கக்கூடாது. மாணவியின் உடற்கூறு ஆய்வு நடைபெறும் இடத்திற்கு சென்று விவரங்களை கேட்டறிய உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

x