ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட்: 6வது முறையாக தாக்கல் செய்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜூலை மாதம் 22ம் தேதி துவங்க உள்ள நிலையில், 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டு முடிவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இவ்வாண்டு ஏப்ரல் முதல் மே மாதம் வரை தேர்தல் நடைபெற்றதால், முன்கூட்டியே, கடந்த பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிவடைந்து, புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜூலை 22 ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ அறிவித்துள்ளார். ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்கிறார். நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 2 வது முறையாக நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், 6வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

x