கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது… குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி: உதயநிதி ஸ்டாலின் ட்விட்


கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக நேற்று நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளி வளாகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பள்ளியைச் சூறையாடினர். மேலும் பள்ளி வாகனங்கள், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும்போலீஸ் வாகனங்களுக்கும் தீவைத்தனர். போராட்டக்காரர்களை விரட்டியடித்த பின்பு போலீஸாரின் கட்டுப்பாட்டில் பள்ளி வளாகம் வந்துள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், " கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி. மாணவிகளுக்குப் பாதுகாப்பான பள்ளிச்சூழலை அமைத்து தருவது அனைவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம்." என்று அவர் கூறியுள்ளார்.

x