வேட்டியை மடித்துக் கட்டி களத்தில் இறங்கிய கோட்டாட்சியரால் மாசடைந்த குளம் மறுஜென்மம் எடுத்தது!


குளத்தைச் சுத்தம் செய்யும் கோட்டாட்சியர் சிவக்குமார்.

பழநி இடும்பன்குளத்தை சுத்தம் செய்ய அழைப்பு விடுத்தும், யாரும் வராததால் பழநி கோட்டாட்சியரே தனி ஆளாகக் குளத்தைச் சுத்தம் செய்ய இறங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கோட்டாட்டசியரின் அதிரடி நடவடிக்கையால் அதிகாரிகள் திகைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சியில் உள்ளது இடும்பன்குளம். புனித தீர்த்தமாக விளங்கும் இங்கு பக்தர்கள் புனிதநீராடி பழநி கோயிலுக்குச் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். மேலும், இக்குளத்தின் நீர் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், குளத்தில் பக்தர்கள் வீசும் பொருட்கள் மற்றும் துணிகளாலும், குடிமகன்கள் மது அருந்திவிட்டு வீசும் பாட்டில்களாலும் இடும்பன்குளம் மாசடைந்து உள்ளது. எனவே, இக்குளத்தைச் சுத்தம் செய்ய முடிவெடுத்த, பழநி கோட்டாட்சியர் சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இடும்பன்குளத்தைச் சுத்தம் செய்ய இறங்கிய பணியாளர்கள்

அதில், மாசடைந்துள்ள குளத்தைச் சுத்தம் செய்து கழிவுகளையும், குப்பைகளையும் வெளியேற்ற பழநி வாழ் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே தெரிவிக்குமாறும் அறிவித்தார்.

இதன்படி, இன்று காலை குளத்தை சுத்தம் செய்யும் பணிக்காக பழநி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் இடும்பன்குளத்திற்கு வருகை தந்தனர்.

ஆனால், குளத்தைச் சுத்தம் செய்வதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும் யாரும் வரவில்லை. இதனால், அப்பகுதி வெறிச்சோடி இருந்தது. இதனைச் சற்றும் பொருட்படுத்தாத கோட்டாட்சியர் சிவக்குமார் தனி ஆளாகக் குளத்தை ச்சுத்தம் செய்யும் பணியில் இறங்கினார். இதனைச் சற்றும் எதிர்பாராத வருவாய்த்துறை அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். மேலும், கேட்டாட்சியர் சிவக்குமார் புதிய வேஷ்டி ஒன்றை வாங்கி வரச்சொல்லி வேஷ்டியை அணிந்து கொண்டு அருகிலிருந்த கம்பை எடுத்துக்கொண்டு அசுத்தமான குளத்தில் இறங்கி குப்பைகளைக் கரைசேர்க்கும் பணியில் இறங்கினார்.

இதனைத்தொடர்ந்து தொடர்ந்து கேட்டாட்சியரே சுத்தம் செய்ய ஆரம்பித்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் ஏராளமானோர் குளத்தைச் சுத்தம் செய்ய முன்வந்தனர். தொடர்ந்து சிவகிரிப்பட்டி ஊராட்சி தூய்மைப்பணியாளர்கள், தீயணைப்புத்துறையினர், பழநி நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் குவிந்தனர். சிலமணி நேரத்தில் குளம் சுத்தமாக்கப்பட்டு பணி நிறைவடைந்தது. பிறரை எதிர்பார்க்காமல் குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் அதிரடியாக களத்தில் இறங்கிய பழநி கோட்டாட்சியர் சிவக்குமாரின் நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

x