பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அம்மாவட்டத்தில் உள்ள மோடர்காம் கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மறைவிடத்தில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காஷ்மீர் மண்டல காவல் துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "குல்காம் மாவட்டத்தில் உள்ள மோடர்காம் கிராமத்தில் என்கவுன்ட்டர் தொடங்கியது. காவல் துறையும், பாதுகாப்புப் படைகளும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' என்ற அமைப்பின் இரண்டு உயர்மட்ட கமாண்டர்கள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

x