சொத்துத் தகராறில் சொந்த அண்ணனின் மனைவியையே கொலை செய்த தம்பியை தேனி தென்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி - ராமுத்தாய் (60) தம்பதியினர். ராமுத்தாய், தனது தோட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த தென்கரை காவல்துறையினர் நேரில் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ராமுத்தாயின் கணவர் வெள்ளைச்சாமியின் தம்பி ராஜூவுக்கும், வெள்ளைச்சாமிக்கும் சொந்தமான பொதுவான தோட்டம் தாமரைக்குளத்தில் இருந்துள்ளது. ஆனால், இத்தோட்டத்தின் மின்இணைப்பு மட்டும் ராமுத்தாயின் பெயரில் இருந்தது. இந்நிலையில், வெள்ளைச்சாமி மற்றும் ராஜு சொத்தைப் பிரித்துக் கொண்டனர்.
இச்சூழலில், வெள்ளைச்சாமிக்கு சொந்தமான தோட்டத்தையும், ராமுத்தாய் பெயரில் உள்ள மின்இணைப்பையும் விற்க தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். மின்இணைப்பு துண்டிக்கப்பட்டால் தன்னால் தண்ணீர் பாய்ச்ச முடியாது எனக்கூறி ராஜூ அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அதற்கு தம்பதியினர் மறுத்துள்ளனர்.
இதன் காரணமாக அவர்களுக்கு இடையே முன் விரோதம் நீடித்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு தோட்டத்தில் இருந்த ராமுத்தாயை, ராஜூ(60) அரிவாளால் வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ராஜூைவை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் காவல்துறையினர் கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.