இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமடைந்து அங்கு தினம் மக்கள் கிளர்ச்சி நடந்து வருகிறது. இப்படியான சூழலிலும் இலங்கைக்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கஞ்சா, திமிங்கலத்தின் வாந்தி ஆகியவை கடத்தப்பட இருந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு கஞ்சா, திமிங்கலத்தின் வாந்தியான அம்பர் கிரீஸ் ஆகியவை கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஆய்வாளர் விஜய அனிதா, சார்பு ஆய்வாளர்கள் வேல்ராஜ், தவமணி, தர்மராஜ் ஆகியோர் தலைமையில் போலீஸார் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
இவர்கள் தூத்துக்குடி தாளமுத்து நகர், சுனாமி காலணி அருகே வாகன தணிக்கையில் இன்று அதிகாலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரும், அதன் பின்னால் லாரியும் வந்தது. காரை தடுத்து நிறுத்தியபோது நிற்காமல் சென்றது. பின்னால் வந்த லாரியும் நிற்காமல் சென்றது. போலீஸார் காரையும், லாரியையும் துரத்திச் சென்றனர். சிறிதுநேரத்திற்குப் பின்பு காரும், லாரியும் ஒரு உப்பளத்தில் இறங்கிநின்றது. லாரி டிரைவர் மட்டும் சிக்கினார்.
போலீஸார் லாரியை சோதனை செய்துபார்த்தபோது, அதில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, திமிங்கலத்தின் வாந்தி ஆகியவை இருந்தன. பிடிபட்ட லாரி டிரைவர் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த ஆண்டிச்செல்வத்திடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல கொண்டு சென்றது தெரியவந்தது. தப்பியோடியவர்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்