அரிசியையும் விட்டு வைக்காத மத்திய அரசு: ஜிஎஸ்டி வரியால் 8,000 ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!


அரிசி மீதான 5% ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி தமிழகத்தில் உள்ள எட்டாயிரத்துத்துக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கடந்த மாதம் இறுதியில் சண்டிகரில் நடந்த சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 47-வது பொதுக்கூட்டத்தில் பிராண்டட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், கோதுமை மாவு, பிற தானியங்கள், தேன், பப்பாளி, உணவு தானியங்கள் போன்ற வேளாண் பொருட்களின் மீதான வரி அதிகரிக்கப்பட்டது.

இதுவரை ஆண்ட எந்த அரசும் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவுப் பொருளான அரிசிக்கு வரி விதித்தது இல்லை.‌ ஆனால் இப்போது ஆளும் மத்திய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டியை விதித்துள்ளது. இந்த வரி வருகிற 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

அரிசியின் மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை நீக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழ் நாடு முழுவதும் 8000 ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், அதனைச் சார்ந்த லாரி உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள், அரிசி வணிகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 5 லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் நேற்றும், இன்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வணிகர்கள் பொதுமக்கள் நலன் கருதி மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும் என்று அரிசி ஆலைகள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

x