நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வு பயத்தால் அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் ரயில்வே காலனி தெருவை சேர்ந்தவர்கள் நடராஜன்-உமாராணி தம்பதியர். நடராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். உமாராணி தங்கள் மகள் மற்றும் மகனுடன் அரியலூரில் வசித்து வருகிறார். மகள் நிஷாந்தி(18) கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்து தேர்வு எழுதினார். அதில் 430 மதிப்பெண்கள் பெற்றதால் அவரை மருத்துவம் படிக்க வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
அதற்காக கடந்தாண்டு நீட் தேர்வு எழுதினார். அதில் போதிய மதிப்பெண்கள் எடுக்க இயலாததால் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் அவர் தேர்வு பயத்தால் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று இரவு தனது வீட்டில் உள்ள தனது அறைக்கு தூங்க சென்றவர் இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் அறையை திறந்து பார்த்தபோது, அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கியுள்ளார்.
இதுகுறித்து அரியலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் விசாரணையில் கடந்த சில நாட்களாக மாணவி மன உளைச்சலில் இருந்ததாகவும், நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், மாணவி எழுதியுள்ள ஒரு கடிதத்தையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். மாணவியின் கடிதத்தில் வேதியியல் மற்றும் உயிரியில் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து ஊரிலேயே இருக்க வேண்டும் எனவும் உருக்கமான குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதையடுத்தே, தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கின. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. இந்நிலையில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு மாணவியும் மரணம் அடைந்திருப்பது நீட் தேர்வு குறித்த உறுதியான ஒரு முடிவை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.