வயிற்றில் பாய்ந்த துப்பாக்கி குண்டு... உயிரை மாய்த்துக் கொண்ட காவலர்: ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த விபரீதம்


ஆன்லைன் ரம்மியால் கடன் தொல்லை ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கடந்த அதிமுக ஆட்சியில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த அவசரச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆன்லைன் ரம்மி காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வந்தன. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து தமிழக அரசிற்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆன்லைன் ரம்மி பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கை கேட்கப்பட்டது. இந்நிலையில் அந்த குழுவின் ஆய்வறிக்கையை முதல்வர் முக.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு ஜூன் 27-ம் தேதி சமர்ப்பித்தார். ஆனால் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவந்தன. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்றன.

கோவையில் கண்காட்சி ஒன்றில் நேற்று மாலை ஆயுதப்படை காவலர் காளிமுத்து பணியில் இருந்தார். அப்போது அவரின் துப்பாக்கி திடீரென வெடித்ததில், அவரின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவந்தது. மேலும் அவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் உள்ளதாகவும், கடன் தொல்லை அதிகரித்ததால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றதாகவும் காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் காவலர் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x