மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகியை துப்பாக்கி முனையில் காரில் கடத்த முயற்சி: வேலூரில் பரபரப்பு


மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவரை சீருடை அணியாத கர்நாடக காவல்துறையினர் துப்பாக்கி முனையில் காரில் கடத்த முயன்ற சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்துள்ள பாக்கம் குருராஜபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன்(38). இவர் மத்திய காவல் படையில் காவலராகப் பணிபுரிந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது குடியாத்தம் நகரப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நாராயணி பவன் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

கர்நாடகா மற்றும் வேலூர் பகுதிகளில் உள்ளவர்களிடம் இவருக்குக் கடன் பிரச்சினை உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பெங்களூருவில் பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. இது குறித்து பெங்களூரு போலீஸார் சரவணனை தீவிரமாகத் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் சரவணன் வழக்கம் போல வீட்டிலிருந்து இன்று காலை ஹோட்டலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வழியில் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரிலிருந்த மூன்று கர்நாடக காவலர்கள் சரவணனை வழிமறித்துள்ளனர். அவர்கள் சீருடையில் இல்லாததால் அவர்களுக்கும், சரவணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகக் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து துப்பாக்கி முனையில் சரவணனை அவர்கள் கைது செய்ய முயன்றனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் குடியாத்தம் நகர போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்று சரவணன் உள்ளிட்ட நான்கு பேரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று குடியாத்தம் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கர்நாடக மாநிலம், ஏலங்கா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் சிரிசில், மஞ்சுநாத், ஓம் பிரகாஷ் எனத் தெரிய வந்தது. இதையடுத்து குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் குடியாத்தம் போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு பெங்களூருவில் ஏலச்சீட்டு நடத்தி அதன் மூலம் 1 கோடியே 30 லட்சம் பணம் சரவணன் கையாடல் செய்தது தெரியவந்தது. மேலும் இவர் மீது செக் மோசடி வழக்கு ஏலங்கா காவல்நிலையத்தில் உள்ளதும் தெரியவந்தது. பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கர்நாடக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணையின் முடிவில் கர்நாடகா போலீஸார் கொண்டு வந்த துப்பாக்கிகளை, குடியாத்தம் போலீஸார் மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் சரவணனை கர்நாடக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் சரவணன் மீது, வேலூர் மற்றும் கர்நாடகாவில் பல்வேறு மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

x