அடுத்த சீசனில் சந்திக்கிறேன், டாட்டா!: 'குக் வித் கோமாளி’ ஷிவாங்கி நெகிழ்ச்சி பதிவு


'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிறைவடைந்திருக்கிறது. இதனை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமையல் கொஞ்சம், நகைச்சுவை நிறைய என்ற கான்செப்ட்டோடு 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது விஜய் தொலைக்காட்சி. முதல் சீசன் பலரது கவனத்தையும் பெற, இரண்டாவது சீசன் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து தற்போது மூன்றாவது சீசன் ஆரம்பித்து அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது.

மூன்றாவது சீசனில் வித்யுலேகா, சந்தோஷ், ரோஷினி, அம்மு அபிராமி, அந்தோணி தாசன் என பலர் கலந்து கொண்டனர். இதில் பரத், அதிர்ச்சி அருண் என ஒரு சில கோமாளிகளைத் தவிர ஷிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலா என முந்தைய சீசன்களில் கலந்து கொண்டவர்களே இதிலும் இருந்தார்கள்.

இறுதிச் சுற்றுக்கு வித்யுலேகா, ஷ்ருதிகா, அம்மு அபிராமி, தர்ஷன், முத்து என ஐவர் தேர்வாக இதன் இறுதி படப்பிடிப்பு இன்று அதிகாலை 2 மணிக்கு முடிந்திருக்கிறது. வெற்றியாளர் யார் என்பது இனி வரும் வாரங்களில் தெரிய வரும்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் செட்டைப் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷிவாங்கி, '' 'குக் வித் கோமாளி- சீசன்3' முடிவடைந்துள்ளது. உங்கள் எல்லாரையும் அடுத்த சீசனில் சந்திக்கிறேன். டாட்டா" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து விரைவில் விஜய் தொலைக்காட்சி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இதில் ஷிவாங்கியின் பெயரும் அடிபடுகிறது. இதுமட்டுமல்லாமல், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விஜே ரக்‌ஷன், ஷ்ருதிகா ஆகியோரும் பிக்பாஸ் ஆறாவது சீசன் போட்டியாளர்கள் பட்டியலில் இருக்கின்றனர். மேலும் பின்னணி பாடகி ராஜலட்சுமியின் பெயரும் இதில் இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான பட்டியலை விஜய் தொலைக்காட்சி அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

x