இந்தியாவிலேயே சொந்தமாக இணையதள சேவை உள்ள ஒரே மாநிலமாக கேரளா மாறியுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.
கேரளாவில் உள்ள அனைவருக்கும் இணைய வசதியை அளிப்பதற்கான அரசாங்கத்தின் லட்சியத் திட்டமான ‘கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (KFON) லிமிடெட்க்கு’ தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து இணைய சேவை வழங்குநர் (ISP) உரிமம் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், " நாட்டிலேயே கேரளா தனது சொந்த இணைய சேவையைக் கொண்ட ஒரே மாநிலமாகிறது. கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் தொலைதொடர்புத் துறையிலிருந்து இணைய சேவை வழங்குநர் உரிமத்தைப் பெற்றுள்ளது. இதனால் நமது மதிப்புமிக்க KFON திட்டம் மூலம் மக்களுக்கு இணைய சேவையை அடிப்படை உரிமையாக வழங்கும் அதன் செயல்பாடுகளை வேகப்படுத்த செய்ய முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் திட்டம் மூலமாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் 30,000 அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையத்தை வழங்க கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. முந்தைய இடதுசாரி அரசாங்கம் 2019-ல் இணைய இணைப்பை அடிப்படை உரிமையாக அறிவித்து ரூ.1,548 கோடியில் KFON திட்டத்தை அறிமுகப்படுத்தியது.