தேர்வில் தோல்வியால் ஆறுதல் கூறிய நண்பர்கள்: தாயின் சேலையால் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த கல்லூரி மாணவர்


பொதுவாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள்தான் முதிர்ச்சியின்மை காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் விபரீத முடிவை எடுப்பார்கள். பள்ளிப் பருவம் தாண்டி கல்லூரி சென்று விட்டால் அவர்களின் வாழ்க்கை முறை மாறிவிடும்.

எதையும் இயல்பாக எடுத்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் கடந்து போகும் மனநிலை அவர்களுக்கு வந்துவிடும். ஆனால் திருச்சியில் ஒரு மாணவர் செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் மனம் உடைந்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள சங்கரன் பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் விக்னேஸ்வரன்(22). இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் அவர் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்திருக்கிறார். பெற்றோரும் நண்பர்களும் அவருக்கு ஆறுதல் கூறியிருக்கின்றனர். ஆனாலும் அவர் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்ட அவர், தன் தாயின் சேலையை எடுத்து மின் விசிறியில் கட்டி, அதில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோட்டை போலீஸார் விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x