கரோனா விதிமுறை மீறல்… அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரியைத் தாக்கிய நகைக்கடை உரிமையாளர்: வைரல் வீடியோவால் பரபரப்பு


சென்னை மைலாப்பூரில் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரியை நகைக்கடை உரிமையாளர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே கரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. அத்துடன் மாநகராட்சி ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகளை நடத்துவோரிடம் கட்டாய முகக்கவசம் அணியுமாறு மாநகராட்சி அதிகாரிகள் இன்று அறிவுறுத்தி வந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள சாந்தா நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 13 பேர் முகக்கவசம் அணியவில்லை. அவர்களைக் முகக் கவசம் அணியுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் அந்த நகைக்கடையில் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவியும் இல்லை, அதே போல வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கப்படாததும் தெரிய வந்தது. இதனால் கரோனா விதிகளைக் கடைபிடிக்குமாறு கடை உரிமையாளர் சந்தோஷ் குமாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக மாநகராட்சி சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் முரளி, இரண்டு பேருக்கு அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நகைக்கடை உரிமையாளர் சந்தோஷ்குமார் மற்றும் ஊழியர்கள் முரளியைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் சந்தோஷ் குமார் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார், நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் நகைக்கடையின் உரிமம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது தெரியவந்துள்ளது.

x