அடிக்கடி 'மட்டம்' போட்ட சிறைக்காவலர்: அதிரடி காட்டிய சிறைத்துறை!


அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் தன்னிச்சையாக அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்ட மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய சிறைக்காவலரை பணி நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டு கொடைக்கானல் கிளைச் சிறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஆனந்த். இவர் மாற்றுப் பணியாக மதுரை மத்திய சிறையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடமையை விடுத்து அடிக்கடி தன்னிச்சையாக முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்துள்ளார்‌. மேலும், விடுப்பு குறித்து அதிகாரிகளிடம் எவ்வித விளக்கமும் அளிக்காமல் இருந்துள்ளார்.

இதுபோன்று, தன்னிச்சையாக விடுப்பு எடுத்துக் கொண்டதால் அவர் மீது பலமுறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார். இச்சூழலில், அவர் மீது எழுந்த தொடர் புகாரை அடுத்து சிறைத்துறை விசாரணை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் இரண்டாம் நிலை காவலர் ஆனந்தை பணி நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதுபோன்று அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டு, ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சிறைத்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை எச்சரித்துள்ளது.

x